பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு புதல்வர்களும் தங்கள் சொத்து விபரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம், கடைசி முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவே அவர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள கடைசி கால அவகாசமாகும். அடுத்த செப்டம்பர் மாதம் அவ்விருவரும் தங்கள் சொத்து விபரங்களை SPRM- மிடம் அறிவிக்க வேண்டும் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
மிர்சான் மகாதீர்- ருக்கும், மொக்ஸானி மகாதீர்- ருக்கும் ஆகக் கடைசியாக வழங்கப்பட்டுள்ள இந்த ஒரு மாத கால அவகாசத்தை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் சொத்து விபரங்களை SPRM- மிடம் அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.
கடந்த 1981 ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது பிரதமராக தமது தந்தையார் துன் மகாதீர் பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை மிர்சான் மகாதீர்- ரும், மொக்ஸானி மகாதீர்- ரும் தங்கள் சொத்து விபரங்களை SPRM- மிடம் அறிவிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கடந்த ஜனவரி உத்தரவிட்டு இருந்தது.