மலேசியாவில் ஒவ்வொரு நாளும் 850 டிக் டாக் வீடியோக்கள் அகற்றப்படுகின்றன

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-

மலேசியாவில் பிறரை பகடிவதை செய்தல், அவதூறு விளைவித்தல், அவமதித்தல் போன்ற உள்ளடக்கங்களை கொண்ட சராசரி 850 டிக் டாக் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் அகற்றப்பட்டு வருகின்றன.

மலேசியாவில் இதுபோன்ற உள்ளடக்கங்களை கொண்ட டிக் டாக் வீடியோக்களில் இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 78 ஆயிரம் டிக் டாக் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடக நிறுவனங்கள் வழங்கிய தரவுகள் காட்டுகின்றன.

பிறரை இம்சைப்படுத்தக்கூடிய அல்லது நிந்திக்கும் தன்மையிலான டிக் டாக் வீடியோக்களை அகற்றுவதற்கு இன்னும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மன நல நிபுணர்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

குறிப்பாக சமூக ஊடகங்களில் பெரும் செல்வாக்குப் பெற்று இருந்த ஏ. ராஜேஸ்வரி என்ற ஈஷாவின் மரணத்திற்கு பிறகு சைபர்புல்லி எனும் இணைய பகடிவதை சம்பவங்கள் மலேசியர்கள் மத்தியில் பெரும் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

பகடிவதை தன்மையில் வெளியிடப்படும் டிக் டாக் வீடியோக்களை முழு வீச்சில் அகற்றும் அதேவேளையில் சமூக வலைத்தள பயனர்களை பாதுகாப்பதற்கு போலி கணக்கில் வலம் வருகின்றவர்களின் கணக்குளை முடக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

தவிர ஆன்லைனில் வலம் வருகின்றவர்கள், தங்களுக்கு எதிரான விமர்சனங்கள் வரும் போது, மன நல ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற விழிப்புணர்வுகள் அதிகளவில் போதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS