ஜார்ஜ் டவுன்,ஆகஸ்ட் 15-
பினாங்கு, ஜார்ஜ்டவுன்,லெபு சூலியா மற்றும் லவ் லேன் பகுதியில் சாலைகளில் மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தாக கூறப்படும் ஒன்பது உணவக மற்றும் மதுபான விடுதி நடத்துநர்களுக்கு எதிராக பினாங்கு மாநகர் மன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் அப்பகுதியில் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு சொந்தமான மேஜைகள், நாற்காலிகள் மற்றும் இதர தளவாடங்களை வாரி சென்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வர்த்தக நடத்துநர்களுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும், சம்மன் வழங்கப்பட்டும், அவற்றை பொருட்படுத்தாமல் பிடிவாதத்துடன் செயல்பட்ட காரணத்தினால் அவர்களின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்க இயக்குநர் நூரஸ்ரின் மூரஸ்லான் ஓங் தெரிவித்தார்.