பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14-
வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு வேலைக்கு செல்வதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டின் பிரதான விமான நிறுவனமான பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் , கடந்த மே மாதமே டிக்கெட் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
விமானத்தின் டிக்கெட் விலையை செயற்கையாக உயர்த்தி, குறிப்பிட்ட பயண நிறுவனங்களுக்கு மட்டும் இருக்கைகளை பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் ஒதுக்கி கொடுத்ததாக வங்காளதேசத்தின் முன்னணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை டாக்காவிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் விமானத்தின் சிக்கன வகுப்பில் 773 மலேசிய ரிங்கிட்டாக இருந்த விமான டிக்கெட் விலை , 2 ஆயிரத்து 782 மலேசிய ரிங்கிட்டாக பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் உயர்த்தியதாக அந்த நாளேடு கூறுகிறது.
வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்படுவதற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் விமானங்களுக்கான் டிக்கெட் விலையை பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் அசாதரணமாக உயர்த்தியது என்பது தெரியவந்துள்ளது.