பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 14
கடந்த ஜுன் 17 ஆம் தேதி மக்கள் நடமாட்டம் மிகுந்த காஜாங் மெட்ரோ பிளாசா பேரங்காடி நகைக்கடையில், துப்பாக்கி முனையில் 32 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 முகமூடி கொள்ளையர்களில் ஒருவன், போலீசாரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ள வேளையில் இதர கொள்ளையகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேடப்பட்டு வரும் அந்த கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் இன்று தெரிவித்தார்.
காஜாங் அருகில் Silk நெடுஞ்சாலையில் சுங்கை பாலக் டோல் சாவடி அருகில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த கொள்ளையன் சூட்டு வீழ்த்தப்பட்டான்.
தங்கள் வசம் துப்பாக்கிகளை வைத்திருக்கும் அந்த கொள்ளைச் கும்பலை சேர்ந்த சந்தேகப் பேர்வழிகள், இன்னமும் சிலாங்கூர் மாநிலத்திற்குள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.