புத்ராஜெயா,ஆகஸ்ட் 14-
சொத்துக்களை அபகரிப்பதற்காக பார்வையற்ற தனது கணவரின் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக ஓர் இந்திய மாதுவுக்கும், அவரின் தம்பிக்கும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
48 வயது எஸ். ஏஞ்சலா தேவி மற்றும் அவரின் 44 வயது தம்பியான எஸ்.விஜயன் ஆகியோரின் குற்றத் தீர்ப்பை நிலைநிறுத்திய அப்பீல் நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஷா ஆலம் உயர்நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனைக்கு பதிலாக 33 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த கொடூர கொலையை சகோதரனும், சகோதரியும் கூட்டாக செய்த போதிலும் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஏஞ்சலா தேவி – யின் தம்பி விஜயனுக்கு 10 பிரம்படித் தண்டனை விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிற்பகல் ஒரு மணியளவில் காஜாங், கம்போங் பாரு சுங்கை சுவா-வில் PKNS மலிவு விலை குடியிருப்புப்பகுதியில் ஒரு பார்வையற்றவரான 59 வயது R. தேவராஜுவை சுத்தியால் தலையிலேயே அடித்துக்கொன்றதாக அவரின் மனைவி ஏஞ்சலா தேவி மற்றும் அவரின் தம்பி விஜயன் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

வீட்டில் நிகழ்ந்த கொள்ளை முயற்சியின் போது, தனது கணவர் தேவராஜுவை, கொள்ளையார்கள் சுத்தியலால் அடித்துக்கொன்றதாக நாடகமாடிய மனைவி ஏஞ்சலா தேவி, பின்னர் அந்த கொலையை தனது தம்பியுடன் கூட்டு சேர்ந்து செய்துள்ளார் என்பது போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
வாகன போக்குவரத்து சேவையையும், பழைய இரும்புப்பொருட்கள் வியாபாரமும் செய்து வந்த தேவராஜுவின் சொத்துக்களை அபகரிப்பதற்காக மனைவி ஏஞ்சலா தேவி- யும், அவரின் தம்பியுடன் கூட்டாக சேர்ந்து ஈவிரக்கமின்றி இந்தப் படுபாதகத்தை புரிந்துள்ளனர் என்பது பின்னர் அம்பலமானது.