செபாங்,ஆகஸ்ட் 15-
Kripto நாணய மதிப்பில் 44 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பிணைப்பணம் கோரி, சீன நாட்டுப் பிரஜை ஒருவரை கடத்தியதாக கணவன், மனைவி மற்றும் இதர நான்கு தனிநபர்கள் சிப்பாங், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
25 க்கும் 29 க்கும் இடைப்பட்ட வயதுடைய தம்பதியர் உட்பட அறுவரும் நீதிபதி அமீர் அஃபெண்டி ஹம்சா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
10 லட்சத்து 7 ஆயிரத்து 696 அமெரிக்க டாலரை பிணைப்பணமான பெறுவதற்காக அந்த சீன நாட்டுப் பிரஜையை அறுவரும் கடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் பிடிபடாமல் இருக்கும் நால்வருடன் கூட்டாக சேர்ந்து இந்த அறுவரும் கடந்த ஜுலை 11 அம் தேதி காலை 11 மணியளவில் சைபர்ஜெயாவிலிருந்து வெளியேறும் MEX ( மெக்ஸ் ) எனப்படும் Maju Expressway நெடுஞ்சாலையில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அறுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த அறுவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.