ஒழுங்கு நடவடிக்கை போதாது, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 15-

ஒரு மாற்றுத் திறனாளியான e- hailing ஓட்டுநரை தாக்கிய அரச பேராளர் ஒருவரின் போலீஸ் மெய்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் அறிவித்து இருப்பது, அந்த நடவடிக்கை மட்டும் போதாது என்று வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாறாக, இது போன்ற குற்றங்களை புரிகின்ற நபர்களை போலீஸ் துறை எவ்வாறு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுகிறதோ அதேபோன்று நடவடிக்கையை அந்த போலீஸ் மெய்காவலருக்கு எதிராகவும் எடுக்க வேண்டும் என்று அந்த மாற்றுத் திறனாளியின் வழக்கறிஞரான சுரேந்திரன் கேட்டுக்கொண்டார்.

கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கோலாலம்பூரின் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறையில் அந்த மாற்றுத் திறனாளியை தாக்கிய போலீஸ் படையைச் சேர்ந்த அந்த மெய்காவலர், நீதிமன்றத்தில் நிறுத்துப்பட்டு குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று சுரேந்திரன் வலியுறுத்தினார்.

வெறும் ஒழுங்கு நடவடிக்கை மட்டும் போதாது. மாறாக , அந்த நபருக்கு எதிராக கிரிமினல் சட்டம் பாய வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவரை சுரேந்திரன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS