கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-
கோலாலம்பூர் மாநகரில் லைசென்ஸின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு மாதந்தோறும் லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்ற துணை இயக்குநர் மற்றும் ஓர் அமலாக்க அதிகாரி, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
44 வயது இர்வான் அப்துல்லா என்ற அந்த துணை இயக்குநரும், 34 வயது ஜஹாரி முஹம்மது என்ற அமலாக்க அதிகாரியும் ீ நீதிபதி அனிதா ஹருன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
லைசென்ஸின்றி செயல்படும் கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் 2 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றுள்ளனர் என்பது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் சம்பந்தப்பட்ட கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் மற்றொரு தரப்பினரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக அவ்விருக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பெறப்பட்ட லஞ்சத்தொகைக்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.