வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்ப்பதா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

கோலாலம்பூரில் உள்ள தூதகரத்தில் பொது அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, பெரும் கலவரமாக மாறி வரும் வேளையில், இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அந்த நாட்டில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறையை கண்டித்து மலேசியாவில் உள்ள 37 அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலாலம்பூரில் உள்ள வங்காளதேசத் தூதகரகத்தில் குழுமிய 37 அமைப்புகளின் 300 க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிான வன்முறையும், வெறியாட்டமும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் வகையில் பல்வேறு சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் , இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வங்காளதேசத்தில் இந்துக்களின் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் உரக்க முழுக்கமிட்டனர். .

வங்காளதேசத்தின் இடைக்கால அரசுக்கு தலைமையேற்றுள்ள முஹம்மது யூனுஸ், சிறுப்பான்மை இந்துக்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

வங்காளதேசத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்துக்களின் கோயில்கள் மற்றும் இந்துக்களில் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சூறையாடப்பட்டு வருகின்றன. இதனை மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். வங்களாதேசத்தில் நடப்பது இந்துக்களுக்கு எதிரான இன படுகொலையாகும் என்று உலக மனித உரிமை சம்மேளனத்தின் தலைவர் S. சசிக்குமார் தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு இடைக்கால அரசுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்ல வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் குழுமியிருந்தவர்கள் சூளுரைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மலேசிய மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்று வங்காளதேச தூதரகத்தின் முதன்மை பொறுப்பாளரிடமும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒப்படைத்தனர்.

அதிருப்தியை வெளிப்படுத்தும் இந்த ஆர்ப்பாட்டம், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

WATCH OUR LATEST NEWS