உடைகளை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 15-

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அதிகாரப்பூர்வ தேசிய உடை மீதான கடும் விமர்சனங்கள் எழுந்து ஓய்ந்து விட்டது. இந்நிலையில், அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின் விளையாட்டு உடைகள் குறித்து அவர்களை தொடர்ந்து நிந்தித்து வருவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் கேட்டுக்கொண்டார்.

நமது விளையாட்டு வீரர்களின் விளையாட்டு உடைகள் விஷயத்தில் அவர்களை விட்டுவிடுங்கள், உங்களின் விருப்பதை அவர்கள் மீது திணிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று ஹன்னா யோவ் வலியுறுத்தினார்.

பெண் விளையாட்டு வீராங்கனைகளின் உடை விவகாரம் அடிக்கடி இணையத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறி வருகிறது. நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள், ஷரியா விதிக்கு உட்பட்ட ஆடைகளை அணியவில்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

நமது போட்டியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே அவர்களின் முன்னுரிமையாகும் என்று தமது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்த பதிலில் அமைச்சர் ஹன்னா இயோ, மிகச் சுருக்கமாக எதிர்வினையாற்றியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS