கூலாய்,ஆகஸ்ட் 15-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கை நோக்கி 49.4 ஆவது கிலோமீட்டரில் கூலாய்- அருகில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். 12 பயணிகள் காயம் அடைந்தனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரண்டு லோரிகளும், ஒரு பேருந்தும் சம்பந்தப்பட்டு இருந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் டான் செங் லீ தெரிவித்தார்.
பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் எதிரே சென்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் அந்த பேருந்து மோதிய வேளையில் அந்த லோரி, மற்றொரு லோரியை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதில் உடலிலும், தலையிலும் பலத்த காயத்திற்கு ஆளான 48 வயது பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார். பேருந்தில் இருந்த 12 பயணிகள் காயமுற்றனர்.
அந்த பேருந்து கோலாலம்பூர் தாசெக் செலாதன் டிபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து ஜோகூர், லார்கின்- னை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக டான் செங் லீ தெரிவித்தார்.