புத்ராஜெயா,ஆகஸ்ட் 15-
ஹோட்டல் அறை ஒன்றில் தனது மைத்துனியும், காதலியுமான 22 பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இந்திய ஆடவர் இன்று அந்த தண்டனையிலிருந்து உயிர் தப்பினார்.
N. குமரேசன் என்ற 36 வயதுடைய அந்த நபரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்த புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம், அத்தண்டனைக்கு பதிலாக 32 ஆண்டுகள் சிறையும், 12 பிரம்படித் தண்டனையும் விதிக்க தீர்ப்பு அளித்தது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் டெங்கு மைமுன் துவான் மாட், தூக்குத் தண்டனைக்கு பதிலாக தனக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த இந்திய ஆடவரின் மேல்முறையீட்டிற்கு அனுமதி அளித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தமது காதலியான 22 வயது S. சிவசங்கரியை கொலை செய்த குற்றத்திற்காக குமரேசனுக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியிருந்தது.
தனது மனைவியை விவகாரத்து செய்து விட்டு, மைத்துனியை கரம் பிடிப்பதற்காக முக்கோண காதலில் ஈடுபட்ட குமரேசன், ஹோட்டல் அறையில் சிவசங்கரியுடன் நடந்த கடுமையான போராட்டத்தில் அவரை மூச்சடைக்கச் செய்துள்ளார் என்று துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர் ஏயு கிம் சியாங் தமது வாதத்தில் தெரிவித்து இருந்தார்.