சமையல் எண்ணெயில் சுமார் 20 மில்லியன் ரிங்கிட் மோசடி

ஈப்போ , ஆகஸ்ட் 21-

மானிய விலையில் சமையல் எண்ணெயில் சுமார் 20 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த கும்பலின் சதியை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு முறியடித்துள்ளதாக அதன் அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடம் தெரிவித்தார்.

பேராக்கில் உள்ள மூன்று மானிய விலை சமையல் எண்ணெய் பேக்கேஜிங் நிறுவனங்கள், ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள மொத்த விற்பனை நிறுவனங்கள் இந்த முறைகேடுகளில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஈப்போவில் மானிய விலையில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும் நிலையம், பேராக்கில் உள்ள மூன்று பேக்கேஜிங் நிறுவனங்களுக்கு ஒரு மாதத்திற்கு 550 டன் சமையல் எண்ணெயை வழங்கியது.

அவ்வாறு பேக்கேஜிங் செய்த பிறகு, இந்த நிறுவனங்கள் சமையல் எண்ணெயை பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆனால், இந்த நிறுவனங்கள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெற்ற சமையல் எண்ணெயில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பேக்கேஜ் செய்து பதிவுசெய்த சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்க சதி செய்தன.

இதற்கிடையில், பெரும்பாலான எண்ணெய் சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் உள்ள மொத்த விற்பனை நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

பின்னர் மொத்த விற்பனை நிறுவனங்கள் மானிய விலையில் கிடைக்கும் சமையல் எண்ணெயை பாட்டிலில் அடைத்து, மானியம் இல்லாத விலையில் விற்பனை செய்தன என்று அவர் கூறினார்.
புத்ராஜெயா, பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஜோகூரைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த 20 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அஸ்மான் கூறினார்.

சமையல் எண்ணெய்க்கு கூடுதலாக, கொள்முதல் மற்றும் விற்பனை விலைப்பட்டியல், சமையல் எண்ணெய் மானிய கோரிக்கை ஆவணங்கள் மற்றும் RM163,000 ரொக்கம், அத்துடன் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட வணிக ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக அஸ்மான் கூறினார்!

WATCH OUR LATEST NEWS