ஹோப் கூட்டத்திற்கு தலைமையேற்றார் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு, ஆகஸ்ட் 23-

பினாங்கு வீட்டு வசதி வாரியத்தின் வீட்டு செயல்திறன், அடைவு நிலைக் குழுவான HOPE ( ஹோப் ) கூட்டம், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி கோம்தார் கட்டடத்தின் 53 ஆவது மாடியில் உள்ள நிலம் கூட்டறையில் நடைபெற்றது.

பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், HOPE- பின் தலைருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆறாவது கூட்டமாக இது அமைந்தது.

பினாங்கு மாநில மக்களின் வாங்கும் திறனுக்கேற்ற விலையில் வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கி மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும்,/ மக்கள் அடர்த்தியை குறைக்கவும், பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தவும் மற்றும் சிறந்த முறையில் வீட்டு வசதி செய்து தரும் குழுவாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தலைமையிலான HOPE விளங்குகிறது.

அந்த வகையில் HOPE-பின் ஆறாவது கூட்டத்தில் மக்களின் வாங்கும் திறனுக்கேற்ற விலையில் கட்டப்படும் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த பல்வகையான 160 வீடுகளின் விண்ணப்பங்கள் தொடர்பான ஆகக்கடைசியான நிலவரங்கள் முறைப்படுத்தப்பட்டதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் பினாங்கு மாநிலத்தில் மக்களின் வாங்கும் திறனுக்கேற்ப 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

அந்த இலக்கை அடைவதற்கு வீடமைப்புத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் மாநில மக்களின் வீடமைப்புத் தேவையை நிறைவு செய்வதற்கு HOPE வாயிலாக தாம் தொடர்ந்து கடப்பாடு கொண்டு இருப்பதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு உறுதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS