Masjid India-வில் இந்திய சுற்றுப்பயணி புதையுண்டார் / முழு வீச்சில் தேடுதல் பணி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் நடமாட்டம் மிகுந்த மஸ்ஜித் இந்தியா, மலாயன் மாளிகை வர்த்தகப்பகுதியின் நடைப்பாதையில் திடீரென்று ஏற்பட்ட ஆழமான குழியில் மண்ணோடு புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்திய சுற்றுப்பயணியான மாது ஒருவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 8.22 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மண் புதையுண்ட பெரும் குழியில் 48 வயது மதிக்கத்தக்க அந்த இந்தியப்பிரஜை, சிக்கியுள்ளார். அவரை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப்படையினர், பொது தற்காப்பு படையினர், STORM ( ஸ்டோர்ம்) படையினர், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தினர், எட்டு மணி நேரத்திற்கு மேலாக மேற்கொண்ட போதிலும் அந்த மாதுவை கண்டுபிடிக்கும் முயற்சி இதுவரையில் தோல்வியில் முடிந்தது.

சுமார் பத்து மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள அந்த குழியில் பாரந்தூக்கி இயந்திரத்தின் உதவியுடன் ஏணிகள் இறக்கப்பட்டு, அதன் வாயிலாக மீட்புப்படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் அந்த மாது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அந்த ஆழமான குழியில் நீரோட்டம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாக புதையுண்டாரா? அல்லது மண்ணுக்கு அடியில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளரா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தனது குடும்பத்தினருடம் மலேசியாவிற்கு சுற்றிப்பார்க்க வந்த அந்த இந்திய மாது, இன்றிரவு தாயாகம் திரும்புவதற்கு திட்டமிட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதற்கு முன்னதாக, மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் பொருட்களை வாங்குவதற்காக அந்த வர்த்தகப் பகுதிக்கு குடும்பத்தினருடன் அந்த மாது வந்துள்ளார்.

பேரங்காடி மையம் திறப்பதற்கு இன்னும் சில மணி நேரம் ஆகலாம் என்று கருதி அப்பகுதியில் மெது நடையாக நடந்து சென்று கல்நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த போது, திடீரென்று அப்பகுதியில் பெரும் குழி விழுந்து, அந்த மாதுவும் புதையுண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மாதுவை கண்டுபிடிப்பதற்கு தீயணைப்புப்படையினரின் மோப்ப நாய் ஒன்றும் களம் இறக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியாளர்கள், போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மாநகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான Masjid India- பொது மக்களின் நடமாட்டத்திற்கு இன்னமும் பாதுகாப்பான பகுதியாக உள்ளது என்றும் இந்த சம்பவத்தினால் எந்தவொரு சாலையும் மூடப்படவில்லை என்றும் Dang Wangi மாவட்ட போலீஸ் தலைவர் சுலிஸ்மே அஃபெண்டி சுலைமான் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணி நடைபெறும் பகுதி மட்டுமே பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS