கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
கோலாலம்பூர் செராஸ் வட்டாரத்தில் ஓர் இடைநிலைப்பள்ளி முன்புறம் காத்திருந்த Nissan Almera கார், மாணவியை கடத்த வந்த வாகனம் அல்ல என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளது.
அந்த இடைநிலைப்பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவிகள் அல்லது கால்நடையாக வீட்டிற்கு புறப்படும் மாணவிகளை கடத்துவதற்காக அந்த வாகனம் காத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலில் உண்மையில்லை என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.
அந்தப் பள்ளி அருகில் ஒரு வீட்டில் தனது வருங்கால மனைவியை அழைத்து செல்வதற்காக அந்நிய ஆடவர் ஒருவர் தனது வாகனத்தில் வெகுநேரமாக காத்திருந்தார். . இது குறித்து அந்த ஆடவர், போலீசாருக்கு விளக்கம் அளித்து இருப்பதாக ரவீந்தர் சிங் குறிப்பிட்டார்.
தனது வாகனத்தின் புகைப்படத்தையும், பதிவு எண்ணையும் பதிவேற்றும் செய்து அது, மாணவிகளை கடத்தும் வாகனம் என்று காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த அந்நிய ஆடவர் இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் மேலும் விளக்கினார்.