ஷா ஆலம், ஆகஸ்ட் 23-
நாட்டின் பிரதமராகுவதற்கு தன்னை ஆதரித்து, 115 எம்.பி.க்கள் சத்தியப்பிரமாண வாக்குமூல பிரகடனத்தை வழங்கியதாக கூறியிருக்கும் இருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அது மறுக்க முடியாத உண்மையாகும் என்று அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.
முகைதீன் யாசினுக்கு 115 சத்தியப் பிரமாண பிரகடனங்கள் இருந்தது, பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், தமக்கு கிடைத்த அந்த ஆதரவை பெரிக்காத்தன் நேஷனலின் எந்தவொரு கூட்டத்திலும் மக்களை தூண்டுவிடுவதற்கு முகைதீன் யாசின் முயற்சித்தது கிடையாது என்று ஹம்சா ஜைனுடின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தனக்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு சத்தியப்பிரமாண பிரகடனங்கள் இருந்த போதிலும் பிரதமராகுவதற்கு மாமன்னர் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அண்மையில் முகைதீன் அறிவித்து இருந்தார். இதன் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்கையில் ஹம்சா ஜைனுடின் மேற்கண்டவாறு கூறினார்.