100 வெள்ளி கேட்கும் அந்த மர்மப் பெண் யார்?

குவாந்தன் ,ஆகஸ்ட் 24-

குவந்தான் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் ஒரு பெண், குடையைப்பிடித்தப்படி வீட்டுக் கதவைத் தட்டிப் பணம் கேட்கும் அதேவேளையில் தனக்கு 10 வெள்ளி வேண்டாம் என்றும் / 100 வெள்ளி மட்டுமே வேண்டும் என்றும் / கேட்கும் அந்த மர்மப் பெண் யார் என்பதை கண்டறிவதில் அவ்வட்டார மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த மர்மப் பெண் பற்றிய புகைப்படங்களை குவந்தான் வட்டார மக்களில் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மர்மப் பெண்ணிடம் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வலைவாசிகள் விடுத்துள்ளனர்.

அண்மையில் இந்திரா மகோட்டா பகுதியில் நடமாடிய அந்தப் பெண், தற்போது தாமன் தாஸ்-ஸில் நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றில் துப்புரவு வேலை செய்வதாகவும், பிள்ளையும், கணவரும் வீட்டில் இருப்பதாகவும், அவர்கள் பசியில் வாடி வருவதாகவும் அந்தப் பெண் கூறி வந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் பரிதாப நிலையை கண்டு பலர் 10 வெள்ளியை கொடுத்து உதவ முன்வந்தனர். ஆனால், பத்து வெள்ளியை நிராகரித்து விட்ட அந்தப் பெண் தனக்கு 100 வெள்ளி கொடுத்தால் மட்டுமே தம்முடைய தற்போதைய பிரச்னையை தீர்க்க முடியும் என்று கூறி வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் சில இடங்களில் விநோத நோயினால் அவதிப்படும் தனது பிள்ளைகளின் மருத்துவ செலவிற்கு பண உதவி தேவைப்படுகிறது என்றும் அந்தப் பெண் வீட்டுக் கதவுகளை தட்டுவதாக சொல்லப்படுகிறது.

எனினும் அந்தப் பெண் தொடர்பில் இது வரையில் தாங்கள் எந்தவொரு போலீஸ் புகாரையும் பெறவில்லை என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசுதெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS