தஞ்சோங் மாலிம் ,ஆகஸ்ட் 24-
தஞ்சோங் மாலிம், கம்போங் உலு ஸ்லிம்-மில் உள்ள Risda Eco Patk Resort சுற்றுலா தலத்தில் நீரோடை முகட்டில் திடீரென்று ஏற்பட்ட நீர் பெருக்கினால் சிக்கி பரிதவிக்கும் 19 பேர் இன்று பாதுகாப்பாக மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நீர்ப்பெருக்கில் சிக்கிய அந்த 19 பேரையும் மீட்பதற்கு அந்த சுற்றுலாத்தலத்தின் பணியாளர்கள், வருகை தந்தவர்கள் மற்றும் மீட்புப்படையினர் துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
எந்தவொரு பாதிப்பின்றி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதற்கான நடவடிக்கை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் அஸிஸி மேட் அரிஸ் தெரிவித்தார்.
நீரோடை மேலே நிர்மாணிக்கப்பட்ட பாலம் நேற்று, திடீர் நீர் பெருக்கினால் இடிந்து விழுந்தது. இதனால் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை நோக்கி வர முடியாமல் அந்த 19 பேரும் பெரும் தவிப்புக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.
அனைவரையும் மீட்பதற்கு ஒரே வழி, படகை பயன்படுத்துவதுதான். அதன் அடிப்படையிலேயே இன்று காலையில் அனைவரையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அஸிஸி மேட் அரிஸ் தெரிவித்தார்.
தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார் அவர்.