கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-
தனது தாயார் விஜயலெட்சுமி நடைப்பாதை குழியில் விழுந்து விட்ட செய்தி கேட்டு தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, , அந்த மாதுவின் மகன் எம். சூரியா தாய்லாந்திலிருந்து நேற்றிரவு 9.20 மணியளவில் கோலாலம்பூர் வந்த சேர்ந்தார்.
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் தமது தாயார் விழுந்த குழியைப் பார்த்து, துயரத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் அந்த இளைஞர் கதறி அழுதார். தமது தாயாரை எப்படியாவது உயிரோடு மீட்டுக்கொடுக்கும்படி அந்த 26 வயது இளைஞர், மீட்புப்பணியாளர்களிடம் கெஞ்சி, மன்றாடியக் காட்சி, நேரில் பார்த்தவர்களின் கண்களை குளமாக்கியது.
இன்று சனிக்கிழமை தங்களின் சொந்த ஊரான ஆந்திரா பிரதேசத்திற்கு திரும்புவதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் திட்டமிட்டு இருந்த வேளையில், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தாய்லாந்திலிருந்து நேரடியாக கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்து விடுவதாக அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தனது தாயார் குழியில் விழுந்து காணாமல் போன செய்தி கேட்டு, நிலைக்குலைந்துப் போன அந்த இளைஞருக்கு அவரின் தந்தை மாத்தையாவும், உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.