விஜயலெட்சுமின் உடல், நீரோட்டப்பகுதியின் இடுக்களில் சிக்கியிருக்கலாம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 24-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா வர்த்தகப் பகுதியில் நேற்று காலையில் நடைப்பாதை திடீரென்று இடிந்து விழுந்த பெருங்குழியில் சிக்கி, சாக்கடை நீரில் இழுந்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இந்தியா, ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த சுற்றுப்பயணி விஜயலெட்சுமியை தேடும் பணியை மீட்புப்பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாக தொடங்கியுள்ளனர்.

நேற்று காலை 8.22 மணியளவில் பெறப்பட்ட அவசர அழைப்பிற்கு பிறகு 48 வயதுடைய விஜயலெட்சுமியை தேடும் பணி தொடங்கப்பட்டு, 28 மணி நேரம் கடந்த நிலையில் அவரை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அந்த மாதுவின் உடல், நிலத்தடிப்பகுதியின் நீரோட்டத்தில் குறுக்கே பாயும் நீர்குழாய்கள் அல்லது கேபள் ஒயர்களின் மத்தியில் இடுக்குகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இன்று காலை 9.00 மணியளவில் தொடங்கப்பட்ட மீட்புப்பணியில் மதியம் 12.30 வரையில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை. விஜயலெட்சுமி விழுந்த பகுதியில் உருவாகியுள்ள ஆழமான பெருக்குழியிலிருந்து அந்த நீரோட்டம் செல்லும் இலக்கை நோக்கி, நடைப்பாதைகளின் பளிங்கு கற்களை தகர்க்கும் பணி, மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்புப்பணியில் தீயணைப்பு மீட்புப்படையினர், பொது தற்காப்பு படையினர், STORM ( ஸ்டோர்ம்) படையினர், கோலாலம்பூர் மாநகர் மன்ற பணியாளர்கள், Indah Water பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மலேசியாவை சுற்றிப் பார்ப்பதற்கு தனது குடும்பத்தினருடன் வந்த ஓர் சுற்றுப்பயணிக்கு கோலாலம்பூர் மாநகரின் முக்கிய வர்த்தகப்பகுதியில் நேர்ந்த கதி, உலக மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் மலேசிய செய்தி நிறுவனங்கள் உட்பட AFP போன்ற பன்னாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் நேற்று மாலை முதல் மஸ்ஜிட் இந்தியாவில் முகாமிட்டு, அந்த இந்திய மாதுவின் நிலை குறித்து கண்டறிவதற்கு தொடர்ந்து செய்தி சேகரித்து வருகின்றனர்.

ஆத்திரபிரதேசம், சித்தூர் மாட்டவத்தில் உள்ள குப்பம் பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி, தனது கணவர் மாத்தையா, மகன் சூரியா மற்றும் ஒருபெண் பிள்ளை, இன்னும் சில உறவினர்களுடன் மலேசியாவில் சுற்றிப்பார்ப்பதற்காக வந்திருந்த போது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மஸ்ஜிட் இந்தியாவில் குடியிருப்பு பகுதியான Malayan Mansion- னில் விஜயலெட்சுமி குடும்பத்தினருடன் தங்கியிருந்துள்ளார். இன்று சனிக்கிழமை தாயகம் புறப்படுவதையொட்டி சில பொருட்களை வாங்கும் அதேவேளையில் காலை பசியாறை உண்பதற்காக Malayan Mansion- னலிருந்து லெபோ அம்பாங்கிற்கு குடும்ப உறுப்பினர்களுடன் நடந்த சென்று கொண்டிருந்த போது, நடைப்பாதையில் திடிரென்று ஏற்பட்ட பெரும் குழியில் விஜயலெட்சுமி விழுந்து நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS