சுங்கை பெட்டானி , ஆகஸ்ட் 27-
கெடா, சுங்கைப்பட்டாணி, பெடோங்- தனம் பெடோங்- கில் கார் கழுவும் பணியாளரான ஓர் இந்திய இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் மூன்று இந்திய ஆடவர்கள் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.
அந்த மூன்று ஆடவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்படவிருப்பதாக குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் கார் கழுவும் பணியாளரான 28 வயது நரேந்திரன் சுப்பிரமணியம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதேவேளையில் மற்றொரு நபரான பாதுகாவலர் ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகிசுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மொத்தம் ஒன்பது ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கும் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று இந்திய இளைஞர்களில் இருவர் சுங்கைப்பட்டாணியை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொருவர் கோலக்கெட்டிலைச் சேர்ந்தவர் என்று ஏசிபி வான் அசாருதீன் வான் இஸ்மாயில் விளக்கினார்.
Caption
செய்தி & படம்: ஹேமா எம்.எஸ். மணியம்