வினோத் மூர்த்தி வெட்டிக்கொலை / நான்காவது நபர் கைது

ஜாசின் , ஆகஸ்ட் 27-

மலாக்கா, ஜாசின், ரிம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தின் முன்புறம், பாராங் ஏந்திய முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கனரக வாகன நடத்துநர் வினோத் மூர்த்தி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்து நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜாசின், தமன் ரிம் படு- வில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையம் முன்புறம் தொடங்கி, ஜாசின் மருத்துவமனை வரை நீடித்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நான்காவது சந்தேகப்பேர்வழி பிடிபட்டுள்ளார்.

21 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி, தடுப்புக்காவல் உடையில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9.25 மணியளவில் ஜாசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீஸ் துறைக்கு மாஜிஸ்திரேட் மசானா சினின் அனுமதி அளித்தார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21, 22 மற்றும் 31 வயதுடைய மூன்று நபர்களுக்கு செப்டம்பர் முதல் தேதி வரையில் தடுப்பு காவல் அனுமதி நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கொலைக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சுறுத்தல், அத்துமீறி நுழைதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பில் போலீசார் மூன்று விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளனர்.

இதில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகிய, மலாக்கா, ஜாசின், ரிம், தமன் மெஸ்ரா ரிம்- மைச் சேர்ந்த 24 வயது விநோத் மூர்த்தி என்பவர் , ஜாசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.

ஜாசின் மருத்துவமனையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் சில நபர்களை போலீசார் தேடி வருவதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS