ஷா ஆலம், ஆகஸ்ட் 27-
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூவாயிரம் வெள்ளியை பெற்றுக்கொண்டு ஷா ஆலாம், போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக்காவல் முகாமிலிருந்து நேபாளிய பிரஜை ஒருவரை விடுவித்த குற்றத்திற்காக முன்னாள் போலீஸ்காரர் ஒருவருக்கு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது.
34 வயத S. கபிலன் என்ற அந்த முன்னாள் போலீஸ்காரர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ அனிதா ஹரூண் இத்தண்டனையை விதித்தார்.
தற்போது கார் நிறுத்தும் இடத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் கபிலனுக்கு 6 ஆயிரம் வெள்ளி அபராத்தொகையையும் நீதிமன்றம் விதித்தது.
சம்பந்தப்பட்ட அந்நிய ஆடவரை விடுவிப்பதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு வங்கியில் தனது சேமிப்புக் கணக்கின் வாயிலாக மூவாயிரம் வெள்ளியை கபிலன் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டினால் தாம் போலீஸ் படையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தற்போது பெற்றோரையும், இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தாம் இருப்பதாகவும் கபிலன் தனது கருணை மனுவில் தெரிவித்தார்.