கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா, இனியும் பாதுகாப்பான பகுதியா? / மீண்டும் ஒரு ஆழமானக் குழி கண்டுபிடிப்பு / அச்சத்தில் உறைந்தனர் மக்கள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-

நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் முக்கிய வர்த்தகப் பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று ஏற்பட்ட ஆழமான குழியில் விழுந்து காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை தேடும் பணி, இன்று ஆறாவது நாளாக எட்டியுள்ளது.

இந்நிலையில் 48 வயதான அந்த இந்திய மாதுவை தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் கடுமையாக போராடி வரும் வேளையில் அதற்குள் மற்றொரு ஆழமான குழி, மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்டு இருப்பது, பாதசாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

விஜயலெட்சுமி விழுந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் அந்த ஆழமான குழி இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென்று ஏற்பட்டுள்ளது. முதல் நாள் பெய்த கனத்த மழையின் காரணமாக நீர் தேங்கிய நிலையில் அந்த ஆழமான குழி ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவின் பூவியல் அமைப்பு முறை இன்னமும் பாதுகாப்பாகவே உள்ளது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும் அந்த வர்த்தகத் தளத்தில் இரண்டாவது குழி விழுந்து இருப்பது,. அந்த வர்த்தகத் தளம், இன்னமும் பாதுகாப்பான பகுதியா? என்று அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

திடீரென்று ஆழமான குழி ஏற்பட்ட பகுதியில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்த விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த பாதாளக்குழி விழுந்தப்பகுதியை சுற்றியும் பாதுகாப்பு வளையங்களை கட்டும் பணியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் இரண்டாவது குழி விழுந்து இருப்பதை கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலைஸ்மி அஃபெண்டி சுலைமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் அருகில் மக்கள் நெருங்கி விடாமல் இருப்பதற்கு அப்பகுதி சாலை பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது. அதேவேளையில் மஸ்ஜிட் இந்தியாவின் பூவியியில் திடத்தன்மை குறித்தும் ஆராயும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS