ஜொகூர், ஆகஸ்ட் 28-
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நான்கு சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக போதைப்பொருள் பதனிடுதல் மற்றும் அவற்றின் விநியோகிப்பில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் ஒரு காதல் ஜோடியை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அன்றையத் தினம் பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு மேற்கொண்ட இந்த சோதனையில் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
இந்த சோதனை, ஜோகூர்பாரு, Eco Flora-வில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 வயது அந்நிய நாட்டவர் போதைப்பொருளுடன் பிடிபட்டார். அவரை விசாரணை செய்ததில் அந்த நபரின் காதலி என்று நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த 38 வயது பெண்மணியை போலீசார் கைது செய்ததாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கமிஷனர் குமார் இதனை தெரிவித்தார்.