ஜார்ஜ் டவுன் ,ஆகஸ்ட் 28-
ஓர் இந்தியப்பிரஜையான விஜயலெட்சுமியை இன்னும் தேடி கண்டுப்பிடிக்காத நிலையில், கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் திடீர் பாதாளக்குழியில் அந்த மாது விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மற்றொரு பெரிய குழி ஏற்பட்டு இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூரில் அடிக்கடி மண் உள்வாங்கும் தொடர் சம்பவங்கள் நிகழ்வது பொது மக்களின் பாதுகாப்பு, கேள்விக்குரியாகி வருவதாக சுற்றுச்சூழல் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞரான மீனாட்சி ராமன் தெரிவித்தார்.
அடை மழை சில மணி நேரம் நீடித்தாலே திடீர் வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ஒரு பகுதியாக நாட்டின் தலைநகர் விளங்கி வருகிறது.
இந்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கோலாலம்பூரில் புவியியல் அமைப்பு முறை குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மீனாட்சி ராமன் வலியுறுத்தினார்.
மஸ்ஜிட் இந்தியா மட்டுமின்றி கோலாலம்பூரில் ஆபத்து நிலைந்த மலைச்சாரல் பகுதிகளிலும் அவற்றின் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீனாட்சி ராமன் கேட்டுக்கொண்டார்.