கோலாலம்பூர், ஆகஸ்ட் 28-
இந்நாட்டிலுள்ள தமிழ்க் கலைஞர்களின் நலன் காக்கும் ஐந்து திட்டங்களை தகவல் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அறிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற, மேலவை மற்றும் சட்டமன்ற இந்திய உறுப்பினர்களுடன் நேற்று தமது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பின் போது இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை துணை அமைச்சர் வெளியிட்டார்.
படைப்பாற்றல் உள்ளடக்க நிதி 2024, வானொலியில் உள்நாட்டு பாடல்களுக்கு கூடுதல் வாய்ப்பு, உள்நாட்டு தமிழ்க் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி மற்றும் ‘ACE Workshop‘ எனும் பயிற்சிப் பட்டறை ஆகியவையே அந்த ஐந்து திட்டங்களாகும் என தியோ நீ சிங் விவரித்தார்.
2024 படைப்பாற்றல் உள்ளடக்க நிதித் திட்டத்திற்கு FINAS வாயிலாக 1 கோடியே 30 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், படைப்பாற்றல் மேம்பாட்டு நிதி, அமெச்சூர் படத்தயாரிப்பு நிதி , டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிதி, நாட்டுணர்வு ஆவணப் பட நிதி மற்றும் Go- Pro நிதி என அந்த நிதி ஒதுக்கீடு, ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் பெறப்படும் என்றும் அவர் விளக்கினார்.