பினாங் , ஆகஸ்ட் 28-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முந்தைய நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக மக்கள் அளித்துள்ள புகார்களை அடிப்படையாக கொண்டு இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM – மிடமே தாங்கள் விட்டு விடுவதாக RSN ராயர் தலைமையிலான இந்து அறப்பணி வாரியத்தின் நடப்பு பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு தாம் தலைமையேற்று சரியாக ஓராண்டு நிறைவடையவிருப்பதாக குறிப்பிட்ட ராயர், / துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட நடப்பு பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்து அறப்பணி வாரியம், இந்த ஓராண்டு காலத்தில் இரண்டு முறை மக்கள் சந்திப்புக்கூட்டங்களை நடத்தியதாக நேற்று கோம்தார் கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் தெரிவித்தார்.

பினாங்கு தீவிலும், பெரு நிலத்திலும் இரண்டு முறை நடத்தப்பட்ட இந்த சந்திப்புக் கூட்டங்களில் இந்து அறப்பணி வாரியத்தின் முந்தைய நிர்வாகத்தின் மீது கடுமையான புகார்களும் குறைகூறல்களும், விமர்சன்ங்களும் முன்வைக்கப்பட்டதாக ராயர் சுட்டிக்காட்டினார்.
இந்த புகார்கள் மற்றும் மகஜர்கள் யாவும் நிதி முறைகேடு தொடர்புடைய புகார்களாக இருந்தன. எனவே அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய தனியார் கணக்காய்வாளர் நிறுவனத்தின் வாயிலாக இந்து அறப்பணி வாரியத்தின் முந்தைய நிர்வாகத்தின் கணக்குகளில் தடயவியல் ஆய்வு நடத்தப்படுவதற்கு தாங்கள் முடிவு செய்ததாக ராயர் குறிப்பிட்டார்.
5 மாதங்கள் நடத்தப்பட்ட அந்த தடயவியல் ஆய்வின் முடிவில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதற்கான சாத்தியங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ராயர் விளக்கினார்.

அந்த தனியார் கணக்காய்வாளர் நிறுவனம் வழங்கிய ஆய்வறிக்கையின் முடிவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பினாங்கு கிளையிடம் தாங்கள் ஒப்படைத்துள்ளதாக ராயர் தெரிவித்தார்.
எனவே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்குமான முந்தைய கணக்குகளில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்கும் பொறுப்பை அந்த ஆணையத்திடமே பினாங்கு இந்து அறப்பணி வாரியம் விட்டு விடுவதாக ராயர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பகான் டாலான் ஆட்சிக்குழு உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட இதர ஆணையர்களும் கலந்து கொண்டனர்.
RSN ராயர்,
தலைவர், பினாங்கு இந்து அறப்பணி வாரியம்