கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்கடையில் ஓர் இந்தியப்பிரஜையான 48 வயது விஜயலெட்சுமியை தேடும் பணி, இன்று சரியாக 7 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் மஸ்ஜிட் இந்தியாவில் பாதாள சாக்கடை கால்வாய்களின் இரண்டாவது சிலாப்பு பகுதியில், ஒரு திடமான பொருள் தட்டுப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, இருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தீயணைப்பு, மீட்ப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விஜயலெட்சுமி விழுந்த பெருங்குழியிலிருந்து 80 மீட்டர் தொலைவில் அந்த பாதாள சாக்கடை கால்வாயின் சிலாப்பு உள்ளது.
இந்த 80 மீட்டர் தூர இடைவெளியில் ஒரு திடமான பொருள், நகராமல், சாக்கடை நீரில் சிக்கி நிற்பது, தீயணைப்புப்படையின் K9 மோப்ப நாய் பிரிவைச் சேர்ந்த இரண்டு நாய்களான Denti-யும் Farnkie-யும் கண்டு பிடித்துள்ளதாக தீயணைப்பு, மீட்புப்படையின் துணை இயக்குநர் அஹ்மத் இஸ்ராம் உஸ்மான் தெரிவித்தார்.
மனித சடலங்களை துல்லியமாக கண்டு பிடிப்பதில் பிரத்தியேகப் பயிற்சியும் நிபுணத்துவமும் பெற்ற மோப்ப நாய்களான Denti-யும் Farnkie-யும், அடையாளம் காட்டிய பாதாள சாக்கடையை இலக்காக கொண்டு மீட்புப்படை, சம்பந்தப்பட்ட பகுதியில் இன்று குவிக்கப்பட்டுள்ளதாகஅஹ்மத் இஸ்ராம் உஸ்மான் குறிப்பிட்டார்.
அந்த இரு மோப்ப நாய்கள் அடையாளம் காட்டிய இடத்தையே, பூவியியல் ஆய்வு கேமராவிலும் சந்தேகத்திற்குரிய இடமான அடையாளம் காணப்பபட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சாக்கடை கால்வாய்பாகுதியில் சுமார் 80 மீட்டர் இடைவெளியில் தற்காலிக அடைப்பை ஏற்படுத்தி, அந்த சாக்கடையின் நீரை அகற்றும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேவேளையில் அப்பகுதிக்குள் முக்குளிப்பவர்களை அனுப்பும் நடவடிக்கை எந்த நேரத்திலும் முடுக்கிவிடப்படலாம் என்று அஹ்மத் இஸ்ராம் உஸ்மான் தெரிவித்துள்ளார்.