கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
கோலாலம்பூர் மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த வர்த்தகப் பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்கடையில், விஜயலெட்சுமி விழுந்து காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் தடை விதித்துள்ள பகுதிகளில் மக்கள் நுழைய வேண்டாம் என்று போலீசார் இன்று மாலையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்ஜிட் இந்தியாவில் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டுள்ளன. நில அமிழ்வு ஏற்பட்ட பகுதிகளை சீர்ப்படுத்துவதற்கு மஸ்ஜிட் இந்தியாவில் இரண்டு பிரதான பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சுலிஸ்மி அஃபென்ஃபி சுலைமான் தெரிவித்தார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா- விலிருந்து செமுவா ஹவுஸ் – வரையில் பொது மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசாரின் இந்த உத்தரவையும் மீறி, மக்களின் நடமாட்டம் இருப்பதாக மஸ்ஜிட் இந்தியாவில் இன்று மாலையில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஏ.சி.பி சுலிஸ்மி இதனை குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பாதாளக்குழியில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியாவில் ஆபத்து நிறைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தப்பகுதிகளில் மக்கள் விருப்பம் போல் நடக்க வேண்டாம் என்பதற்காகவே பாதுகாப்பு வளையங்கள் கட்டுப்பட்டுள்ளன.
மீண்டும் விரும்பத் தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.சி.பி சுலிஸ்மி குறிப்பிட்டார்.
இதனிடையே மஸ்ஜிட் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் அந்த வர்த்தப் பகுதியில் மக்களின் நடமாட்டம் பெருவாரியாக குறைந்துள்ளது. பல வர்த்தகத் தளங்கள் வழக்கமான வர்த்தக நேரத்தை விட முன்கூட்டியே கடை அடைப்பு செய்து இருப்பதை பரவலாக காணமுடிந்தது..