கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் ஆளை விழுங்கிய பாதாள சாக்கடையில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை கண்டு பிடிப்பது, சவால் மற்றும் ஆபத்து நிறைந்தது என்பதை மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் மோஹமாட் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் காணாமல் போன விஜயலெட்சுமியை தேடும் பணி, இன்று 7 நாளாக மேற்கொள்ளப்பட்ட வேளையில் அந்த இந்திய மாது விழுந்து பாதாளக்குழியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் முட்டுக்கட்டையாக உள்ள சுமார் 15 மீட்டர் நீளமுள்ள ஒரு திடமான பொருளை அகற்றும் முயற்சி, இன்னும் வெற்றிப்பெறவில்லை என்று மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Wisma Yakin கட்டடம் அருகில் பாதாள சாக்கடை குழாயின் நீரோட்டத்தில் அந்த திடமான பொருள் சிக்கிக்கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விஜயலெட்சுமி விழுந்த இடத்திலிருந்த 44 மீட்டர் தொலைவில் பாதாள சாக்கடை கால்வாயில் ஒரு பொருள் சிக்கியிருப்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது என்று டத்தோ நோர் ஹிஷாம் மோஹமாட் தெரிவித்துள்ளார்.
அந்த பாதாள சாக்கடை குழாய் வாயிலாக நீரின் வேகத்தில் அனுப்பட்ட போத்தல் ஒன்று, மறு முனையில் வெளியேறாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் தடையாக ஏதோ ஒரு முட்டுக்கட்டை உள்ளது. அந்த இடத்தை இலக்காகவே இன்று காலையிலிருந்து மாலை வரையில் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல தரப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மிகுந்த சவாலையும், ஆபத்தையும் தர வல்லதாக உள்ளது.
எனவே இதனை மிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாளவேண்டிய கட்டாயம் மீட்புப்படைக்கு இருப்பதாக என்று இன்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ நோர் ஹிஷாம் இதனை தெரிவித்துள்ளார்.