கோலாலம்பூர், செப்டம்பர் 01-
கோலாலம்பூர் வர்த்தகப்பகுதியான மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைப்பாதை இடிந்து விழுந்து / ஆளை விழுங்கும் பாதாள சாக்கடைக் குழியில் காணாமல் போன ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமிக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவது குறித்து அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படும் என்று கூட்டரசுப்பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆந்திரப்பிரதேசம், சித்தூர் மாவட்டம், குப்பத்தைச் சேர்ந்த 48 வயதுடைய விஜயலெட்சுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவது தொடர்பான பரிந்துரை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை, அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.
வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் 2024 ஆம் ஆண்டுக்கான அரச மலர் விழா கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர் ஜாலிஹா இதனை தெரிவித்தார்.
ஒரு சுற்றுப்பயணியான விஜயலெட்சுமி, கோலாலம்பூரை சுற்றிப்பார்ப்பதற்கு மலேசியாவிற்கு வந்திருந்த போது, கோலாலம்பூர் மாநகர் பராமரிப்புக்கு உட்பட்ட ஒரு நடைபாதையில் திடீரென்று ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன சம்பவத்திற்கு அரசாங்கம் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நேற்று அறிவித்த டாக்டர் ஜாலிஹா , இவ்விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படுவதை இன்று உறுதிப்படுத்தினார்.