பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 02-
தென்கொரியா தலைநகர் Seoul ( சோல் )- க்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH66 விமானம், மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பியது.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. நேற்று இரவு 11.30 மணிக்கு புறப்படுவதற்கு அட்டவணையிட்டப்பட்டு இருந்த அந்த மலேசிய ஏர்லைன்ஸ விமானம், காலதாமதாக பின்னிரவு 12.01 மணிக்கு புறப்பட்டது.
எனினும் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அது திருப்பப்பட்டு, கோலாலம்பூருக்கே வந்தடைந்தது என்று விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் Flight Radar 24 கூறுகிறது. இது தொடர்பாக மலேசிய ஏர்லைன்ஸ் இதுவரையில் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
மலேசிய ஏர்லைன்ஸ் தொடர்புடைய விமானங்கள், பாதி வழியிலேயே திரும்பும் அண்மைய சம்பவங்களில் ஆகக்கடைசி சம்பவமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் Melbourne- னிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸின் MH 128 விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் Alice Springs பிராந்திய விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது.
இதற்கு முன்பு மலேசிய ஏர்லைன்ஸின் மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறங்கின.