கோலாலம்பூர் மாநகரின் நிலத்தடி கட்டமைப்பு / உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 02-

மலேசியாவின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூரின் நிலத்தடி கட்டமைப்பு, உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் பிரதான வர்த்தகப்பகுதியான ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இந்தியப்பிரஜை விஜயலெட்சுமிக்கு நேர்ந்த துயரத்தைப் போன்று மிக மோசமான பேரிடர் நிகழ்வதை முன்கூட்டியே தடுப்பதற்கு இந்த பரிசோதனை அவசியம் என்று ஊராட்சி மன்றங்களை கெராக்கான் கட்சித் தலைவர் டாக்டர் டொமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் வேகமான மேம்பாடுகள், அதன் நிலத்தடி அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் எந்தவொரு பேரிடர் நிகழ்வதாக இருந்தால் அந்த பேராபத்து குறித்து முன்கூட்டிய எச்சரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக நிலத்தடியில், முறைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர், கோலாலம்பூர் நில அமைப்பு முறை எவ்வாறு உள்ளது என்பதை முன்கூட்டியே அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கையாகும்.

இதனை கவனத்தில் கொண்டு ஜாலான் மஸ்ஜிட் இந்தியா உட்பட மாநகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் விரிவான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று டாக்டர் டொமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS