பத்து பஹாட் ,செப்டம்பர் 02-
69 வயது மூதாட்டியை மடக்கி, தங்கச் சங்கிலியை பறித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர்,பத்து பஹாட் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 7 ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படித் தண்டனையை விதித்தது.
கலையரசன் சந்திரன் என்ற 31 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் பத்து பஹாட், செமரா, கம்போங் பரிட் ஹாஜி பைஜூரி – என்ற இடத்தில் ஒரு வீட்டில் மூதாட்டியிடம் தனது கைவரிசையைக் காட்டியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனையை விதிப்பதற்கு முன்னதாக நீதிபதி ஒஸ்மான் அஃபென்டி முகமட் ஷாலே, கலையரசன் சந்திரனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இதேபோன்ற குற்றத்தை புரிந்ததற்காக கலையரசன், தனது தண்டனைக் காலத்தை சிறையிலில் அனுபவித்து விட்டு வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே BOCA ( போக்கா ) எனப்படும் கடும் 1959 ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்பு சட்டத்தில் பிடிபட்டு சிறையில் வெளியேறிய நிலையில் மீண்டும் அதே குற்றத்தைப் புரியும் பட்சத்தில் கலையரசனுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நீதிபதி ஒஸ்மான் அஃபெண்டி தெரிவித்தார்.
தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் கலையரசன், ஆயுதத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் இந்த திருட்டுச் சம்பவத்தில் தன்னை எதிர்த்துப் போராட முடியாமல் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பெண்களின் நிலையை எண்ணிப்பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, கொள்ளையடிப்பது தொடர்பில் பழைய குற்றப்பதிவுகளை கொண்டுள்ள கலையரசனுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூர் இஸ்ஸாட்டி ரோஸ்மேன் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.