கோலாலம்பூர், செப்டம்பர் 02-
குறிப்பிட்ட வழித்தடத்தை நோக்கி செல்ல வேண்டிய விமானம், பாதியிலேயே திரும்பும் சூழலை எதிர்கொள்ளும் பயணிகள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமிருந்து பயணத்திற்கான முழு கட்டணத் தொகையையும் திரும்ப கோர முடியும் என்று Mavcom ( மாவ்கோம் ) எனப்படும் மலேசிய வான்போக்குவரத்து ஆணையத்தின் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு இயக்குநர் புஷ்பலதா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விமானம் 3 மணி முதல் 5 மணி நேரத்திற்குள் மறு அட்டவணையிடப்படும் பட்சத்தில் அக்கட்டணத்தை கோருவதற்கு பயணிகளுக்கு உரிமை உண்டு. எனினும் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் பயணிகள், விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, மற்றொரு விமானத்தில் உடனடியாக ஏற்றப்பட வேண்டும்.
அப்படி மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில் அதில் தொடர்ந்து பயணம் செய்வது அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு, முழு கட்டணத்தையும் கோருவது என்பது பயணிகளை பொறுத்த விஷயமாகும் என்று புஷ்பலதா தெரிவித்துள்ளார்.