கோலாலம்பூர், செப்டம்பர் 03-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அரச மலேசிய கடப்படையின் பயிற்சி அதிகாரி J. சூசைமாணிக்கத்தின் மரணம், வெப்பத்தாக்குதலால் ஏற்பட்டதாகும் என்று மருத்துவர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.
லுமூட், இராணுவ மருத்துவமனையின் 96 ஆவது ஆபத்து, அவசரப்பிரிவின் தலைவரான 48 வயது கொலோனல் டாக்டர் நிக் முகமது நூர் நிக் அமின் கூறுகையில், இதற்கு முன்பு இராணுவ பயிற்சிகளை கையாண்ட அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுக்கு தாம் வந்ததாக குறிப்பட்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி சூசைமாணிக்கம் மருத்துவமனைக்கு தூக்கி வரப்பட்ட போது, அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார். பேச்சு, மூச்சு எதுவுமின்றி நாடித்துடிப்பின்றி காணப்பட்டார் என்று எதிர்தரப்பின் ஏழாவது சாட்சியான கொலோனல் டாக்டர் நிக் முகமது நூர் இதனைத் தெரிவித்தார்.
சூசை மாணிக்கம் மரணம் தொடர்பில் கடற்படையை அதிகாரிகள், மலேசிய இராணுவப்படை, தற்காப்பு அமைச்சு உட்பட 11 தரப்பினருக்கு எதிராக அவரின் தந்தை S. ஜோசப் தொடுத்துள்ள மானநஷ்ட வழக்கில் அரச மலேசிய கடற்படை சார்பில் சாட்சியம் அளிக்கையில் அந்த மருத்துவர் மேற்கண்டவாறு கூறினார்.