சொக்சோ இழப்பீட்டில் மோசடி வேலைகள் / 3 மருத்துவர்கள் மற்றும் இதர 30 பேருக்கு தடுப்புக்காவல்

ஜார்ஜ் டவுன் ,செப்டம்பர் 04-

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கு அதன் சந்தாதாரர்களுக்கு போலி சான்றிதழை தாயரித்துக் கொடுத்து, மோசடி வேலைக்கு துணை நின்றதாக நம்பப்படும் பினாங்கு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 3 மூத்த மருத்துவர்கள் மற்றும் இதர 30 பேருக்கு இன்று தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

26 க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மருத்துவர்கள் உட்பட 33 பேர், கைவிலங்கிடப்பட்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலையில் பினாங்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளுக்கான, SPRM-மின் ஆராஞ்சு நிற டி சட்டைகள் அணிய செய்து, இருவர் வீதமாக பெரிய கும்பலாக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று மருத்துவர்களும், இதர 30 பேரும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருக்க முககவரி அணிந்து கொண்டும், கைளாலும் முகத்தை மூடிக்கொண்டும், நீதிமன்றத்தில் காணப்பட்டனர். .

கைது செய்யப்பட்ட மூன்று மூத்த மருத்துவர்களில் இருவர் செபராங் ஜெயா அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொரு மருத்துவர், புக்கிட் மெர்தாஜாம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர் ஆவார்.

சொக்சோ இழப்பீட்டு குழுமத்தில் இடம் பெற்றுள்ள மருத்துவர்களின் ஆதரவுடன் போலியான மருத்துவ ஆவணங்களையும். சான்றிதழ்களையும், தரவுகளையும் தயாரித்து, சட்டவிரோதமான முறையில் சொக்சோ இழப்பீட்டை பெறுவதற்கு அதன் சந்தாதாரர்களுக்கு துணை நின்றுள்ளனர்.

இவர்களிடமிருந்து சான்றிதழை பெற்ற சொக்சோ சந்தாதாரர்கள், முடத்தன்மைக்கான இழப்பீடு மற்றும் வேலை செய்ய இயலவில்லை என்று கூறி மாதந்தோறும் கிடைக்கக்கூடிய உதவித் தொகை ஆகியவற்றை பெற்று அந்த சமூக பாதுகாப்பு நிறுவனத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS