பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 04-
வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு மாநில டிஏபி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பினாங்கு டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் அறிவித்த போதிலும், அவர் மாநில முதலமைச்சராக தனது தவணைக்காலம் முடியும் வரையில் அப்பொறுப்பில் இருப்பார் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
சௌ கோன் இயோவ் – வின் இந்த முடிவு, பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பாதிக்காது. காரணம், முதலமைச்சர் என்ற முறையில் தனது தவணைக் காலத்தை அவர் முழுமையாக நிறைவு செய்வார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
பினாங்கு மாநில அரசியமைப்புச் சட்டத்தின்படி முலமைச்சராக பொறுப்பு வகிப்பவர், கூடிய பட்சம் இரண்டு தவணைக்காலம் மட்டுமே அப்பொறுப்பில் இருக்க முடியும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.
பினாங்கு மாநிலத்தில் ஐந்தாவது முதலமைச்சராக கடந்த 2018 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பதங் கோட்டா சட்டமன்ற உறுப்பினரான 65 வயது சௌ கோன் இயோவ் , கடந்த 25 ஆண்டு காலமாக பினாங்கு மாநில டிஏபி- க்கு தலைமையேற்று வருகிறார்.