தானா மேரா , செப்டம்பர் 04-
சூதாட்டத்தில் ஈடுபடுவவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மலேசியர்கள் சிலர், சூதாட்டத்தில் தோல்விக்கண்டு, அங்கு பிரச்னையை எதிர்நோக்குவார்களேயானால், இறுதியில் அரசாங்கத்தின் உதவியை நாடுகின்றனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தெரிவித்துள்ளார்.
மலேசியர்கள் சம்பந்தப்பட்ட எல்லைத்தாண்டிய குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பில் குறிப்பாக தாய்லாந்து மற்றும் மியன்மார் எல்லைகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து கருத்துரைக்கையில் சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.
இப்படி சூதாட்டத்தில் சிக்கி, சம்பந்தப்பட்ட நாடுகளில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மலேசியர்களை மீட்டு, அவர்களை நாம் தாயகம் கொண்டு வருகிறோம். ஆனால், அதேநபர்கள் மீண்டும், மீண்டும் அங்கு செல்கின்றனர். அவர்கள் கடத்தலில் சம்பந்தப்படவில்லை. SCAM மோசடியில் சிக்கி தவிக்கின்றனர் என்று அமைச்சர் சைபுடின் குறிப்பிட்டார்.