கோலா நெராங் ,செப்டம்பர் 04-
தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் தகவலை, மூடு மந்திரமாக வைத்திருந்த நிலையில், அது குறித்து கருத்துரைக்க தொடர்ந்து மறுத்து வந்த கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி நோர், இறுதியில் திருவாய் மலர்ந்து, அதனை இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.
தம்முடைய இரண்டாவது திருமணத்தை, சில மாதங்களுக்கு முன்பு தமது முதலாவது மனைவி ஜுஸ்மலைலானி ஜூசோ – ஏற்று நடத்தியதாக சனூசி குறிப்பிட்டார்.
செல்லத்தக்க நடைமுறையின்படியே தமது இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக 50 வயது சனூசி குறிப்பிட்டார்.
சனூசி, ஓர் உயர் பெண் போலீஸ் அதிகாரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக இதற்கு முன்பு கூறப்பட்டு வந்தது.
கெடா மாநிலத்தில் அரிய மண் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெரிய ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை செய்ய வந்த அந்த உயர் பெண் போலீஸ் அதிகாரியை சனூசி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.
அது குறித்து சனூசியை கேட்ட போது, தம்மை பிடிப்பதற்காக வந்தவரை, இறைவன் அருளில் தாம் வளைத்துப் பிடித்து விட்டதாக மிக சூசகமாக கோடி காட்டியிருந்தார்.
எனினும் இன்று கெடா, கோலா நெராங் -கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை சனூசி பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
தேவையற்ற ஆருடங்களை தவிர்க்கவே , இவ்விவகாரத்தை இறுதியில் அம்பலப்படுத்த வேண்டியதாயிற்று என்று சனூசி குறிப்பிட்டார்.