மொராயிஸ் வழக்கில் இறுதி கட்ட மேல்முறையீடு

புத்ராஜெயா,செப்டம்பர் 04-

அரசாங்க துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ அந்தோணி கெவின் மரைஸ் கொலை வழக்கில் குற்றவாளியென உறுதிப்படுத்துப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் R. குணசேகரன் உட்பட ஆறு பேர், தங்கள் தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

அந்த ஆறு பேரின் இறுதி கட்ட மேல்முறையீடு மீதான விசாரணை தேதிகள், அன்றைய தினம் நிர்ணயிக்கப்படும். வங்சா மஜு இராணுவ மருத்துவமனையின் பணியாற்றிய ஒரு மருத்துவரான 61 வயது கொலோனல் டாக்டர் ஆர். குணசேகரன், 53 வயது எஸ். ரவிச்சந்திரன், 32 வயது ஆர்.தினீஸ்வரன், 31 வயதுஏ.கே. தினேஸ் குமார், 34 வயது எம். விஸ்வநாத், மற்றும் 31 வயது எஸ்.நிமலன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து செய்து கொண்ட மேல்முறையீட்டை இவ்வாண்டு மார்ச் 14 ஆம் தேதி அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அப்பீல் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து அந்த அறுவரும் தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த கோர கொலைச் சம்பவத்தில்அந்தோணி கெவின் மரைஸ், அடித்து மரணம் விளைவிக்கப்பட்டதுடன் அவரின் உடல் தோம்பு ஒன்றில் அடைக்கப்பட்டு, சிமெண்ட் பூசப்பட்டு, புதரில் வீசப்பட்டது.

WATCH OUR LATEST NEWS