சிங்கப்பூர்,செப்டம்பர் 05-
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று வரவேற்று இரவு விருந்தளித்தார்.
இஸ்தானா – வில் செரி டெமாசிக் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் , இந்தியப் பிரதமருக்கு இஸ்தானா வளாகம் குறித்து விளக்கியதுடன் அவருடன் அளவளாவி மகிழ்ந்தார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் , மோடியை வரவேற்கும் புகைப்படங்களை தமது சமூக ஊடகப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார். வரவேற்பு குறித்த காணொளியும் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மோடியை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் , உள்துறை, சட்ட அமைச்சர் K. சண்முகம் உள்ளிட்டோரும் வரவேற்றதைக் காணமுடிந்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் உடனிருந்தார்.
லாரன்ஸ் வோங் -கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மோடி, செப்டம்பர் 4, 5 தேதிகளில் சிங்கப்பூருக்கு இருநாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.