ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 05-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கு அதன் சந்தாதாரர்களுக்கு போலி சான்றிதழை தாயரித்துக் கொடுத்து, மோசடி வேலைக்கு துணை நின்றதாக நம்பப்படும் பினாங்கு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் இரண்டு மருத்துவர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
சொக்சோ சந்தாதாரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர உடல் செயலிலுப்புக்கான போலீ இழப்பீட்டுக் கோரிக்கை மனுக்களை அங்கீகரிப்பதில் போலி சான்றிதழ்களை தயாரித்துக்கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இரண்டு மருத்துவர்களும் இன்று காலையில் பினாங்கு ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.
இத்துடன் சொக்சோ இழப்பீடு கோரிக்கை தொடர்பான மோசடியில் கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. தவிர மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆக்கடைசியாக பிடிபட்ட அந்த இரண்டு மருத்தவர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8.50 மணியளவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
43 மற்றும் 50 வயதுடைய அந்த இரண்டு மருத்துவர்களையும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச்சட்டம் 18 ஆவது விதியின் கீழ் விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சிதி நூருல் சுஹைலா பஹாரின் அனுமதி அளித்துள்ளார்.
சொக்சோ தொடர்பில் மருத்துவத்துறையில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய ஊழல் என்று நம்பப்படும் இந்த மோசடி தொடர்பில் மேலும் சில மருத்துவர்கள் பிடிபடலாம் என்று SPRM கோடி காட்டியுள்ளது.