கிள்ளான்,செப்டம்பர் 05-
நகைக்கடை ஒன்றில் தனது தாயாருக்கு தங்கச் சங்கிலியை வாங்கப் போவதாக ஒரு வாடிக்கையாளரைப் போல பாவனை செய்து நடித்த ஆடவர் ஒருவர், தங்கச் சங்கிலியை களவாடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் கிள்ளான், பந்தர் பொட்டானிக் – கில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்தது. உள்ளூரைச் சேர்ந்த அந்த ஆடவர், ஒரு வாடிக்கையாளரைப் போல நடித்ததால், அவரின் நடவடிக்கையில் நகைக்கடை பணியாளர்கள் சந்தேகிக்கவில்லை. ஒரு பெரிய சங்கிலியை வாங்கப்போவதாக அந்த நபர் அடையாளம் காட்டிய 24 ஆயிரத்து 800 வெள்ளி தங்கச் சங்கிலியை கண்ணாடிப் பேழையிலிருந்து எடுத்து, நகைக்கடை பணியாளர் காட்டியிருக்கிறார்.
அந்த தங்கச் சங்கிலியை ஆர்வத்துடன் பார்ப்பதைப் போன்று பாவனை செய்த அந்த ஆடவர், நகைக்கடைப் பணியாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அதனை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த நகைக்கடையைச் சேர்ந்த 25 வயது பெண் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த தங்க ஆபரணத்தை களவாடிய 28 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.