கோலாலம்பூர், செப்டம்பர் 05-
தாம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அந்த திருமணத்தை தமது முதல் மனைவியே முன்னின்று நடத்தி வைத்ததாகவும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நார் – ரை பெட்டாலிங் ஜெயா முன்னாள் பிகேஆர் எம்.பி. மரியா சின் சாடினார்.
தமக்கு உள்ள 4 ஒதுக்கீட்டு கோட்டாவில் இரண்டை நிறைவு செய்து விட்டதாகவும், இன்னும் இரண்டு உள்ளது என்றும் எக்காள சிரிப்புடன் மேலும் இரண்டு திருமணத்தை செய்து கொள்ள முடியும் என்று மறைமுகமாக சனூசி பேசியிருப்பது தொடர்பில் முன்னாள் பெர்சே தலைவரான மரியா சின் கருத்துரைத்தார்..
சனூசியின் கூற்றானது, பல்துலக்கும் பிரஸை மாற்றிக்கொள்வது போல ஆண்கள், பலதார திருமணத்தை மிக எளிதாக செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது என்று மரியா சின் குறிப்பிட்டார்.
இது, ஒரு தலைவரின் பார்வையாக இருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டமானதாகும் என்று பெண்களின் உரிமை போராட்டவாதியான மரியா சின் குறிப்பிட்டார்.
ஒரு ஆண் பலதார திருமணங்களை புரிந்து கொண்டாலும் மனைவிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளை மறந்து விடக்கூடாது. ஒரு கணவன் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தால் வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று மரியா சின் வலியுறுத்தினார்.