கேமரன் ஹைலேண்ட்ஸ்,செப்டம்பர் 06-
நாட்டின் முக்கிய சுற்றுலா வாசதஸ்தலமான கேமரன் மலை, கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக குளிர்ச்சியை இழந்து, வெட்பம் அதிகரித்து வருவது அந்த மலைப்பிரதேசத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
கேமரன்மலையின் தட்பவெட்ப நிலை, முன்பு போல் இல்லை. மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேமரன்மலையின் குளிர்ச்சித் தன்மையை பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இயற்கை அளித்த நன்கொடையை அந்த சுற்றுலாத்தலம் இழக்க நேரிடும் என்று கேமரன்மலை சூற்றுச்சூழல் விழிப்புணர்வு சங்கமான REACH ( ரீச் ) அமைப்பின் தலைவர் ஏ திலீப் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
பகலில் முன்பு 20 முதல் 21 டிகிரி செல்சியஸாக இருந்த கேமரன்மலையில் தட்பவெட்ப நிலை, தற்போது 24 டிகிரி செல்ஸியஸை நெருங்கி விட்டது. இது கேமரன் மலைக்கு வருகின்றவர்கள், இனியும் கம்பளி ஆடை அணியும் நிலை ஏற்படாது. மாறாக, கடல் மட்டத்திற்கு நிகராக நிலப்பகுதியில் உள்ள மக்களைப் போலவே டி சட்டை அணிந்து கொண்டு, கேமரன்மலையின் வெட்ப சூழலை எதிர்கொள்ள முடியும் என்று ஏ திலீப் மார்ட்டின் குறிப்பிட்டார்.
கேமரன்மலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுக்கடங்காத மேம்பாடடுத்திட்டங்களுக்காக அடர்த்தி போர்த்திய பனி நிரம்பிய மலைக்காடுகள் சன்னம் சன்னமாக அழிக்கப்பட்டு வருவது, வெட்ப நிலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும் என்று ஏ திலீப் மார்ட்டின் குற்றஞ்சாட்டுகிறார்.