கோலாலம்பூர், செப்டம்பர் 06-
கோலாலம்பூரின் முக்கிய வர்த்தகத் தலமானஜாலான் மஸ்ஜித் இந்தியா, மக்கள் வருகை புரிவதற்கு இன்னமும் பாதுகாப்பான பகுதியே என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.
அண்மையில் ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமி, மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட ஆள்விழுங்கும் பாதாளச் சாக்கடையில் விழுந்து, உடல் கிடைக்காமல் போன சம்பவத்திற்கு பிறகு அந்த வர்த்தகப் பகுதியின் நில அமைப்பு முறையினால் மக்கள் பெரிதும் அச்சம் அடையத்தொடங்கியுள்ளனர்.
எனினும் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, மக்கள் வருகை புரிவதற்கு இன்னமும் பாதுகாப்பான பகுதியாகும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட் ஷெரீப் உத்தரவாதம் அளித்துள்ளார்.
மண் உள்வாங்கிய சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில் எந்தவொரு ஸ்டால் கடையோ, அல்லது வர்த்தகத் தளமோ மூடுவதற்கு உத்தரவிடப்படவில்லை என்று டத்தோ பண்டார் விளக்கினார்.
தற்போது Wisma Yakin- னிலிருந்து போலீஸ் சாவடி வரையில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை மட்டுமே பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டு, மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் சீரமைப்புப்பணிகளுக்கு வழிவிடவே அப்பாதை மூடப்பட்டுள்ளது. மற்ற இடங்கள் அனைத்தும் இயல்பான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் கூறினார்.
நேற்று மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள வர்த்தகர்களுடன் சந்திப்பு ஒன்றையும் தாங்கள் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த சந்திப்பில், மஸ்ஜிட் இந்தியா இன்னமும் பாதுகாப்பான பகுதியாகும் என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று டாக்டர் மைமுனா குறிப்பிட்டார்.